பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது


பிரியங்கா காந்தியின் காரை மறித்த யூடியூபர் கைது
x

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யூடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி மார்ச் 29 அன்று கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மன்னுத்தி நெடுஞ்சாலை அருகே இரவு 9.30 மணியளவில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் என்பவர் மறித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து தனது காரை அவர் நிறுத்தியுள்ளார். அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்குமாறு வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், அவரது காரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். கைதான மறுநாள் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எம்.பி., பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

1 More update

Next Story