உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து 4வது நாளாக இளைஞர்கள் போராட்டம்...போலீசார் குவிப்பு
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் பி.சி.எஸ் (Provincial Civil Service) மற்றும் ஆய்வு அதிகாரி தேர்வுகளை ஒரே நாளில் நடத்த வலியுறுத்தியும், தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கக்கோரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் மற்றும் விரைவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் பலர் உள்ளே நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக, நேற்று போராட்டத்தின் போது பொருட்களை சேதப்படுத்திய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார். மாணவர்களின் இந்த எழுச்சி பாஜகவின் வீழ்ச்சியாக இருக்கும் என்றும் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் பல ஆண்டுகளாக தேர்வுகள் தாமதமாகி வருவதால் இளைஞர்கள் விரக்தியும், கோபமும் அடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.