முகநூலில் வாலிபருடன் பழக்கம்: கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அகில் அசோகன் கூறினார்.
கண்ணூர்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அகில் அசோகன் (வயது 34). இவர் தனது முகநூல் பக்கத்தில், ஆடு விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டு இருந்தார். அதில் செல்போன் எண்ணை குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த, பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் அகில் அசோகனை தொடர்பு கொண்டார்.
இதன் மூலம் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அகில் அசோகன் கூறினார். இதைத்தொடர்ந்து அடூரில் உள்ள வீட்டுக்கு சென்று பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் பெண் கர்ப்பம் அடைந்தார். அதன் பின்னர் கர்ப்பத்தை கலைக்க அகில் அசோகன் மாத்திரைகளை வாங்கி கொடுத்து உள்ளார்.
அதை எடுத்துக்கொண்ட பின்பும் கர்ப்பம் கலையவில்லை என தெரிகிறது. இதனால் பயமடைந்த அகில் அசோகன், அந்த பெண்ணை விட்டு விட்டு தனது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு தப்பி விட்டார். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், இதுகுறித்து அடூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அகில் அசோகன், 2 குழந்தைகளுக்கு தாயான, கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதும், கர்ப்பத்தை கலைக்க முடியாததால் பெண்ணை ஏமாற்றி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. பின்னர் அகில் அசோகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






