மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது


மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
x

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்து பூஜை செய்கின்றனர். இது 'கர்வா சவுத்' என்று அழைக்கப்படுகிறது. விரதம் இருக்கும் பெண்கள் மாலை நேரத்தில் சல்லடை வழியாக நிலவைப் பார்த்து, பின் தங்கள் கணவனின் முகத்தை பார்க்கின்றனர். பிறகு கணவன் தரும் தண்ணீரை குடித்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

இந்நிலையில், இந்த கர்வா சவுத் விரதத்தை வைத்து உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவேஷ் சயினி(27) என்ற இளைஞர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் புகைப்படத்தை சல்லடை வழியாக பார்ப்பது, தண்ணீர் கொடுப்பது உள்ளிட்ட செய்கைகளை செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், தங்கள் கட்சியின் தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வீடியோ வெளியிட்ட லாவேஷ் சயினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story