முன்னாள் காதலனுடன் சேர்ந்து லிவ்-இன் காதலனை கொலை செய்த இளம்பெண் - டெல்லியில் பரபரப்பு

திட்டமிட்டபடி கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீ விபத்து ஏற்படுத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் காந்தி விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் கடந்த 6-ந்தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ராம்கேஷ் மீனா(வயது 32) என்பவரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, தீ விபத்து ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு முகமூடி அணிந்த 2 நபர்கள் ராம்கேஷ் மீனாவின் வீட்டிற்குள் செல்வதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. மேலும், அவர்களுடன் ஒரு பெண்ணும் வெளியே வந்தார்.
அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, அவர் ராம்கேஷ் மீனாவின் லிவ்-இன் காதலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தேடிப்பிடித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ராம்கேஷ் மீனாவை தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டார்.
முன்னதாக ராம்கேஷ் மீனா தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மிரட்டி வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது முன்னாள் காதலரிடம் கூறியபோது, அவர்தான் ராம்கேஷ் மீனாவை தீர்த்துக் கட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கியதாகவும், திட்டமிட்டமிட்டபடி சம்பவத்தன்று ராம்கேஷ் மீனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ விபத்து ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அந்த பெண்ணின் முன்னாள் காதலர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபர் ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






