திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்; தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது


திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்; தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது
x

மதுஸ்ரீயை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மதுஸ்ரீயை ஹெதலகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 16-ந் தேதி மதுஸ்ரீ உறவினர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பெற்றோர் பெட்டகேரி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் கூறினர்.இதையடுத்து சதீசை அழைத்து விசாரித்தபோது, மதுஸ்ரீ உறவினர் வீட்டுக்கு சென்ற பின்னர் நான் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கையை கண்காணித்தனர்.

இந்தநிலையில், 6 மாதம் கழித்து கடந்த 13-ந் தேதி சதீஷ், மதுஸ்ரீயை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. அதை வைத்து சதீசிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதாவது சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுஸ்ரீயை அழைத்து சென்ற அவர் தனது தோட்டத்தில் தங்க வைத்தார். இந்தநிலையில் ஜனவரி 12-ந் தேதி மதுஸ்ரீ, சதீசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த சதீஷ், துப்பட்டாவால் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் உடல் எலும்பு கூடாக மாறியது. அதை தோண்டி எடுத்து வெவ்வேறு இடத்தில் புதைத்து வைத்தது தெரியவந்தது. இவ்வாறு கடந்த 6 மாதமாக செய்து வந்ததாக தெரியவந்தது. தற்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுஸ்ரீயின் எலும்பு கூடுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அதை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கைதான சதீசிடம் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story