ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி, பெண் உயிருடன் மீட்பு

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீகோட் பகுதியின் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று காரில் தெஹ்ரி மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கிரிட்டிநகர் பகுதியிலுள்ள கார் சென்றுகொண்டிருந்தது.
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் பாயும் அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த பெண் உயிர்பிழைத்தார். ஆற்றில் வெள்ள நீரோட்டம் அதிகமாக இருந்த நிலையில் அந்த பெண் காரின் மேற்பகுதியில் அமர்ந்து உயிர்பிழைத்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காரின் மேற்பகுதியில் அமர்ந்து உயிருக்கு போராடிய அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை பறிகொடுத்த அப்பெண் மிகுந்த அதிர்ச்சி நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






