காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல்


காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல்
x
தினத்தந்தி 6 Feb 2025 3:51 PM IST (Updated: 6 Feb 2025 5:19 PM IST)
t-max-icont-min-icon

காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கேரளா,

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது. 2-வது குற்றவாளியான நிர்மல்குமாருக்கு தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு வாய்ப்பளித்த கோர்ட்டு, விசாரணை தொடர்பான ஆவணங்களை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து கிரீஷ்மா திருவனந்தபுரம் பூஜப்புரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் இளம்பெண் கிரீஷ்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, அவரது மாமாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் பி.பி. சுரேஷ் குமார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தூக்கு தண்டனை மற்றும் சிறை தண்டனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாரர்கள் தரப்பில் கோரி முன்வைக்கப்பட்டது. மேலும் இருவரும் தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டில் மாநிலத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வழக்கின் முழுவிவரம்:-

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகன் ஷாரோன்ராஜ் (வயது 23), குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கும், களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மாவுக்கும் (24) இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு அவ்வப்போது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று காதல் வானில் கிரீஷ்மா சிறகடித்து பறந்தார். இந்தநிலையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி அன்று ஷாரோன்ராஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு உடல்நிலை மோசமானதால் கேரளாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உறுப்புகள் செயலிழந்த நிலையில் ஷாரோன்ராஜ் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஷாரோன்ராஜ் இறந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரை வெகுவாக பாதித்தது. அதே சமயத்தில் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், ஷாரோன்ராஜின் காதலி கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் எனவும் பெற்றோர் ஜெயராஜ், பிரியா ஆகியோர் பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து காதலி கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது. மேலும் காதலி கொடுத்த விஷம் கொஞ்சம், கொஞ்சமாக ஷாரோன்ராஜின் உடல்நிலையை பாதித்துள்ளது என தெரியவந்தது. அதே சமயத்தில் காதலனை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது ஷாரோன்ராஜை காதலித்த சமயத்தில் கிரீஷ்மாவின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவர் ராணுவ வீரராக இருந்துள்ளார். அவர் வசதியான குடும்பம். முதலில் அந்த மாப்பிள்ளையை மணமுடிக்க தயங்கிய அவர் ஒரு கட்டத்தில் சம்மதித்தார். ஆனால் ஷாரோன்ராஜ், காதலி கிரீஷ்மாவை உயிருக்கு உயிராக நேசித்துள்ளார். இதனால் காதலனை எப்படியாவது கழற்றி விட கிரீஷ்மா முடிவெடுத்துள்ளார். ஆனால் ஷாரோன்ராஜ் கொஞ்சமும் மசியவில்லை. அந்த அளவுக்கு காதலி கிரீஷ்மாவை அவர் விரும்பினார்.

இந்தநிலையில் காதலனை ஏமாற்றி ராணுவ வீரரை திருமணம் செய்தால், காதலிக்கும்போது சேர்ந்து எடுத்த வீடியோ, புகைப்படங்களை ஷாரோன்ராஜ், ராணுவ வீரரிடம் காட்டினால் மணவாழ்க்கை இடையில் பறிபோகும் என்ற எண்ணம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் ஷாரோன்ராஜை கொல்ல வேண்டும் என்ற கொடூர புத்தி கிரீஷ்மாவுக்கு உதயமாகி உள்ளது. இதற்காக தடயமின்றி காதலனை கொல்வது எப்படி? என கூகுளில் தேடியுள்ளார்.

அதன்படி சில மாதங்களாக காதலன் ஷாரோன்ராஜை 'ஜூஸ் சேலஞ்ச்' முறையில் கொல்ல திட்டமிட்ட நிலையில் அது தோல்வியிலேயே முடிந்தது. இறுதியாக 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் ஷாரோன்ராஜை, கிரீஷ்மா கொன்றார். உயிருக்கு உயிராக நேசித்த அப்பாவி காதலனை நம்ப வைத்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

இதனை தொடர்ந்து போலீசார் கிரீஷ்மாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தடயங்களை அழிக்க உதவியதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனை, காதலியே தீர்த்துக்கட்டிய சம்பவம் கேரளா-குமரியை உலுக்கியது. மேலும் இதுதொடர்பான வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கிடையே 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாணவரை கொன்ற வழக்கில் கிரீஷ்மா மற்றும் தடயங்களை அழிக்க உதவிய தாய்மாமன் நிர்மல்குமாரையும் குற்றவாளி என நீதிபதி எம்.எம்.பஷீர் அறிவித்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார். மறுநாள் மீண்டும் இருதரப்பு வாதம் நடந்தது. தொடர்ந்து தண்டனை விவரம் கடந்த மாதம் 20-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அன்றைய தினம் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டு கூடியது. அப்போது கோர்ட்டில் குற்றவாளிகள் கிரீஷ்மா, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி எம்.எம்.பஷீர் தண்டனை விவரங்களை வாசித்தார். முக்கிய குற்றவாளியான கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். மேலும் விசாரணையை திசை திருப்பிய குற்றம் உள்பட 2 பிரிவுகளுக்கு 15 வருட தண்டனையும் விதிக்கப்பட்டது. 2-வது குற்றவாளியான நிர்மல்குமாருக்கு தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.


Next Story