பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 25-ந்தேதி மம்தா பானர்ஜி வீடு நோக்கி பேரணியாக செல்ல பா.ஜ.க. திட்டம்
மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி அவருடைய வீடு அருகே 25-ந்தேதி பேரணி ஒன்றை நடத்துவோம் என கூறினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான சுகந்த மஜும்தார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, கட்சி தொண்டர்கள் நாளை முதல் தெருமுனைகளில் போராட்டம் நடத்துவார்கள். வருகிற 25-ந்தேதி, முதல்-மந்திரியின் வீடு நோக்கி பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோன்று, வருகிற 23-ந்தேதி எங்களுடைய மகளிரணியினர், துடைப்பம் மற்றும் கங்கை நீரை எடுத்து கொண்டு சென்று, சில தேர்ந்தெடுக்கப்பட்ட, தூய்மையற்ற காவல் நிலையங்களை தூய்மை செய்வார்கள் என கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி அவருடைய வீடு அருகே 25-ந்தேதி பேரணி ஒன்றை நடத்துவோம் என கூறினார். இதில், 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.