எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
Live Updates
- 25 Nov 2024 12:22 PM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டன. மேலும் உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் இரு அவைகளின் வழக்கமான அமர்வுகள் நடைபெறாது.
இதன்படி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Nov 2024 12:02 PM IST
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமை வகித்தார்.
அவை தொடங்கியது முதல் மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஜெகதீப் தங்கர் இன்று நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
- 25 Nov 2024 11:54 AM IST
குளிர்கால கூட்டத் தொடர்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
வக்பு (திருத்த) மசோதா, 2024 இல் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்கள் நிலுவையில் இருப்பதால், கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தில், “வக்பு திருத்த மசோதா, தற்போதுள்ள சட்டத்தில் பல பெரிய மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் பகுதியை பாதிக்கும். எனவே, அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு வெறும் மூன்று மாத கால அவகாசம் போதுமானதாக இல்லை என்பது மட்டுமல்லாமல், முறையற்ற பரிந்துரைகளையும் விளைவிக்கலாம்” என்று அதில்; தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 25 Nov 2024 11:17 AM IST
மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
இதன்பின் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- 25 Nov 2024 11:14 AM IST
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த மசோதாவை தவிர பஞ்சாப் கோர்ட்டுகள் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் 2024-25-ம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டு உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்த தொடருக்காக மத்திய அரசு பட்டியலிடவில்லை. எனினும் அந்த மசோதாவை வருகிற தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழலில், மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட்டு பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.