தேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்


தேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்
x
தினத்தந்தி 11 Nov 2024 4:27 PM IST (Updated: 11 Nov 2024 4:31 PM IST)
t-max-icont-min-icon

மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என மோடி கூறினார்.

ஹாவேரி:

மராட்டிய மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, மராட்டிய தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் வசூல் இரட்டிப்பாகிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

"மராட்டியத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மற்றும் மராட்டியத்தில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது" என மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஷிக்கானில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது, மோடியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

பிரதமர் இந்த அளவுக்கு பொய் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் இவ்வளவு பொய் கூறும் பிரதமரை நாடு கண்டதில்லை. மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பவும், இடைத்தேர்தலுக்கு செலவிடவும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கலால் துறை மூலம் ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக மராட்டியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஓய்வு பெறவேண்டும். இது நான் அவருக்கு விடுக்கும் சவால்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story