வெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்


வெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்
x
தினத்தந்தி 3 Sep 2024 8:21 PM GMT (Updated: 3 Sep 2024 8:27 PM GMT)

ஆந்திராவை பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

ஐதராபாத்,

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து. இதனால் அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு, இரு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பு அணையில் இருந்து 11.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தடுப்பணையின் கால்வாய்கள் அதிகபட்சமாக 11.9 லட்சம் கன அடி நீரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அபாய நிலையில் அதில் வெள்ள நீர் ஓடுகிறது.

விஜயவாடா நகரமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதோ என்று கூறும் அளவுக்கு, எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதே போல் மாநிலத்தில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக என்.டி.ஆர்., குண்டூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.மழை வெள்ளம் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் பலர் மீட்கப்பட்டு, முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய பாலங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால், பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தண்டவாளங்களில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பெருத்த சேதமடைந்துள்ளன.

இந்தநிலையில், வெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன் என்பது குறித்து துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியதாவது:-

நிவாரண பணிகளுக்கு இடையூராக இருக்கும் என்பதால் வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. பாதிப்புகளை பார்க்க வேண்டுமென விரும்பினாலும் எனது வருகை சுமையாகிவிடக்கூடாது. பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளை விட பொதுச்சேவை செய்வதே முக்கியம் என்றார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆந்திரா, தெலுங்கானா முதல்-அமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார். நடிகர் மகேஷ் பாபு இரு மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் அறிவித்துள்ளார்.


Next Story