டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்..? இன்று ஆலோசனை நடத்தும் பா.ஜ.க.


டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்..? இன்று ஆலோசனை நடத்தும் பா.ஜ.க.
x
தினத்தந்தி 9 Feb 2025 7:50 AM IST (Updated: 9 Feb 2025 12:47 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது.

மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் தொடக்கத்தில் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று இருந்தது. சற்று நேரத்தில் அதிலும் பின்னடைவை சந்தித்தது. இதன்படி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தில் ஓரிடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அந்த கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி மாநில ஆட்சியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜனதா கைப்பற்றியது.

கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா, டெல்லியில் முதன் முறையாக ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக மதன்லால் குரானா பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சாகிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல்-மந்திரிகளாக இருந்தனர். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதன் பிறகு டெல்லி மாநில ஆட்சி என்பது பா.ஜனதாவின் கனவாக இருந்தது. தற்போது கிடைத்த அமோக வெற்றி மூலம், பா.ஜனதாவின் 27 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளதால், வரலாற்று வெற்றியை அக்கட்சியினர் பெரிதாக கொண்டாடினர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்ற நிலையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story