சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறதா? பரபரப்பு தகவல்


சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல்  நடைபெறுகிறதா?  பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 18 Jun 2024 10:34 AM IST (Updated: 18 Jun 2024 11:19 AM IST)
t-max-icont-min-icon

நாடு விடுதலை அடைந்தது முதல் தற்போது வரை மக்களவை சபாநாயகர் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அது இந்த முறையும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. தொடர்ந்து 2 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த பா.ஜனதா அதிகபட்சமாக 240 இடங்களை பெற்றது.எனவே தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்து இருக்கிறது. இதன் மூலம் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்று உள்ளார். அவருடன் புதிய மந்திரி சபையும் பதவியேற்று உள்ளது.இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதில் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பதுடன், 26-ந்தேதி நடப்பு 18-வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பா.ஜனதாவுக்கு அடுத்தபடியாக தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் உள்ளன. இதில் மந்திரிசபையை பொறுத்தவரை நிதி, ராணுவம், வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளை பா.ஜனதாவே தக்க வைத்துக்கொண்டது. தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 2 மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன.இதைப்போல சபாநாயகர் பதவியையும் பா.ஜனதாவே தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என ஐக்கிய ஜனதாதளம் அறிவித்து இருக்கிறது.அதேநேரம் தெலுங்குதேசம் கட்சியின் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. அந்த கட்சியும் சபாநாயகர் பதவியை கேட்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசில் சபாநாயகர் பதவியை கேட்டுப்பெறுமாறு தெலுங்குதேசத்தை எதிர்க்கட்சிகளும் அறிவுறுத்தி வருகின்றன.அந்த பதவி இருந்தால் மட்டுமே தனது கட்சியை பாதுகாக்க முடியும் என்றும், பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு அந்த கட்சி செய்யும் துரோகத்தை பல கூட்டணி கட்சிகள் அனுபவித்து இருப்பதாகவும் சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சபாநாயகர் விவகாரத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிலை இவ்வாறு இருக்க, எதிர்க்கட்சிகளும் சபாநாயகர் நியமனத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்கப்போவது இல்லை என தெரிகிறது.18-வது மக்களவையில் 233 இடங்கள் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு உள்ளது. இவ்வாறு வலுவான நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த பதவி பெரும்பாலும் எதிர்க்கட்சிகளுக்கே வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கவில்லை என்றால் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். அந்தவகையில் துணை சபாநாயகர் பதவி கிடைக்கவில்லை என்றால் சபாநாயகர் பதவிக்கு தங்கள் தரப்பில் இருந்தும் வேட்பாளரை நிறுத்துவது என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 1925-ம் ஆண்டு முதல் 1946 வரை மத்திய சபையின் சபாநாயகர் பதவிக்கு 6 முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால் சுதந்திர இந்தியாவில் இதுவரை மக்களவை சபாநாயகர்கள் அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அதற்கு தேர்தல் நடத்தப்பட்டது இல்லை. எனவே இந்த முறையும் அந்த மரபை தொடர மத்திய அரசு விரும்புகிறது.ஆனால் துணை சபாநாயகர் பதவியை அவர்களுக்கு விட்டுக்கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில் கடந்த 17-வது மக்களவை துணை சபாநாயகர் இன்றியே 5 ஆண்டுகளும் நடந்திருக்கிறது. எனவே 18-வது மக்களவையின் சபாநாயகர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவாரா? இதில் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.


Next Story