டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்தியது யார்? ஏன்? பரபரப்பு தகவல்கள்

போலீஸ் காவலில் உள்ள அவரிடம் புலனாய்வு துறையினர் மற்றும் சிறப்பு படை பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. பதவியேற்றது முதல் அவர் பல்வேறு கள பணிகளில் இறங்கி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா இன்று காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்-மந்திரி ரேகா குப்தா மக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது, அவரிடம் சில ஆவணங்களை கொடுப்பது போன்று கொடுத்து விட்டு, திடீரென அவரை தாக்கினார். இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடல்நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்த தாக்குதலுக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர் ராஜேஷ் கிம்ஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இதுபற்றி அவருடைய தாயார் பானுபென் கூறும்போது, நாய்களின் மீதுள்ள அன்பால் இதனை அவன் செய்துள்ளான். நாங்கள் ஏழைகள். என்னுடைய மகன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் முதல்-மந்திரியிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்றார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, அவன் மகாதேவரின் பக்தன். உஜ்ஜைன் நகருக்கு செல்கிறேன் என கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றான். மாதத்திற்கு ஒரு முறை உஜ்ஜைனுக்கு சென்று விடுவான். ஆனால், டெல்லிக்கு எப்போது சென்றான் என எனக்கு தெரியாது.
அவனிடம் நேற்று அவனுடைய தந்தை பேசினார். எப்போது திரும்பி வருவாய்? என கேட்டதற்கு, நாய்கள் விசயத்திற்காக டெல்லியில் இருக்கிறேன் என கூறினான். பின்னர் தொலைபேசியை வைத்து விட்டான்.
டெல்லியில் நாய்களை எடுத்து சென்ற வீடியோக்களை சமூக ஊடகத்தில் பார்த்து வருத்தமடைந்து இருக்கிறான். அதன்பின்னர் சாப்பிட கூட இல்லை. அவன் ரிக்சா ஓட்டி வருகிறான். அவனுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
ராஜேசுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது. போலீஸ் காவலில் உள்ள அவரிடம் புலனாய்வு துறையினர் மற்றும் சிறப்பு படை பிரிவினரும் விசாரித்து வருகின்றனர். ராஜ்கோட்டில் இருந்து முதன்முறையாக ரெயிலில் நேற்று காலை ராஜேஷ் டெல்லிக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






