போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் பேச்சு: 'பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்..?' - காங்கிரஸ் கேள்வி


போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் பேச்சு: பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்..? - காங்கிரஸ் கேள்வி
x

கோப்புப்படம்

தாம் தான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தவர் என்று பலமுறை சுட்டிக்காட்டி வரும் டிரம்புக்கு, பிரதமர் மோடி எப்போது பதிலளிப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கியது. இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தி விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இரு தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த நாடும் தலையிடவில்லை என்று இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தவர் நான் தான் என்று பலமுறை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது பதிலளிப்பார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், "டிரம்பின் வீடியோ கிளிப்பை டேக் செய்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் தனக்கு பங்கு இருப்பதாக மோடியின் "சிறந்த நண்பர்" கூறுவது 21 நாட்களில் 11வது முறை. இதுதொடர்பாக "பிரதமர் எப்போது பேசுவார்?" என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் தனது பதிவில், "3 நாடுகள் மற்றும் 3 நகரங்களில் 20 நாட்களில் இது 9வது முறை. டொனால்டு டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதன் அதே தொடர் நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் கூறுகிறார் - அமெரிக்க தலையீடு மற்றும் அணு ஆயுதப் பெருக்கத்தை நிறுத்த வர்த்தக கருவியைப் பயன்படுத்துதல். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சமத்துவம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த மே 23ம் தேதியன்று நியூயார்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் டிரம்பின் வர்த்தக செயலாளர், அதே கூற்றுக்களையே கூறினார், ஆனால் டொனால்டு டிரம்பின் நண்பர் நரேந்திர மோடி, இதுகுறித்து தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார். பிரதமர் ஏன் பேசுவதில்லை?.

மோடி எப்போதும் செய்வதை (அதாவது பொய் பேசுவதை) டிரம்பும் செய்கிறாரா? அல்லது அவர் 50 சதவீத உண்மையைப் பேசுகிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக டிரம்பின் கருத்துகளை தெளிவுபடுத்தவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானை அவர் மிகைப்படுத்துவதை எதிர்க்கவும் காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story