உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்


உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்
x
தினத்தந்தி 8 Aug 2024 11:46 AM GMT (Updated: 8 Aug 2024 12:23 PM GMT)

வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்காக கடந்த 1995-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய சட்டத்தில், மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இதன்படி, வக்பு சட்ட திருத்த மசோதாவை, சிறுபான்மையினர் விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்து பேசினார்.

இந்த திருத்த மசோதாவில், வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுவது, வாரியத்தின் அதிகாரங்களை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிஜிஜு கூறும்போது, வக்பு சட்ட திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிடும் நோக்கம் கொண்டதில்லை. அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவும் மீறப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த மசோதா அறிமுகத்தின்போது பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ரிஜிஜு, வக்பு சட்டம் 1995 ஆனது அதற்கான நோக்கங்களை நிறைவு செய்யவில்லை. அதனால், திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, உங்களால் முடியாமல் போனவற்றை கொண்டு வந்து சாதனை படைப்பதற்காகவே இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என காங்கிரசுக்கு கூறி கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என்றும் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வகையில் பேசினார். அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா பற்றிய மத்திய அரசின் விளக்கங்களை ஏற்கவும் மறுத்து விட்டன. இந்த திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. இதனை தொடர்ந்து அவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


Next Story