நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, பூஜ்ய நேரத்தின்போது காலஅளவை கடந்து பேசியபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.
புதுடெல்லி,
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராகவும் போரானது ஓராண்டாக நீடித்து வருகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்ற நீதிமன்றம் கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின்போது இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, சர்வதேச குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது, எங்களுடைய உறுப்பினர் நிலைப்பாடு பற்றி மிக சிறந்த காரணத்திற்காக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெரிய அளவிலான கவனத்துடன் மேற்கொண்ட பரிசீலனை முடிவில், அதில் உறுப்பினராக வேண்டாம் என இந்தியா முடிவெடுத்தது.
அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றம் நிறைவேற்றும் எந்தவொரு முடிவும், எங்களை கட்டுப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற மேலவையில் பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, பூஜ்ய நேரத்தின்போது காலஅளவை கடந்தும் பேசியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன. இதனால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அவை நடவடிக்கைகள் பின்னர் தொடர்ந்தன.