'வங்கிகளில் மராத்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' - ராஜ் தாக்கரே

வங்கிகளில் மராத்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக கடந்த மார்ச் 30-ந்தேதி குடி பட்வா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'மும்பையில் இருந்துகொண்டு மராத்தி மொழியில் பேச மறுத்தால் அவர்கள் கன்னத்தில் அறையுங்கள்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில், வங்கி தொழிற்சங்கங்கள் மன்றம் சார்பில் மராட்டிய முதல்-மந்திரிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு வங்கிகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மராத்தி மொழி விவகாரம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டதாகவும், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறும் கட்சி தொண்டர்களுக்கு ராஜ் தாக்கரே கடந்த சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ராஜ் தாக்கரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வங்கிகளில் மராத்தி மொழியை பயன்படுத்தாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கிகள் தங்கள் சேவைகளில் மும்மொழி கொள்கையை(ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழி) பின்பற்றவில்லை என்றால் நவநிர்மான் சேனா கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவார்கள் என்றும், அதன் பிறகு சட்டம்-ஒழுங்குக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் ராஜ் தாக்கரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.