இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட செய்தது: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர்களை, ரத்தம் சிந்த வைத்த பயங்கரவாதிகளுக்கு, எந்தவொரு பதுங்குகுழியும் பாதுகாப்பானது இல்லை என நாம் காட்டி விட்டோம் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கூறும்போது, இந்தியர்களை, ரத்தம் சிந்த வைத்த பயங்கரவாதிகளுக்கு, எந்தவொரு பதுங்குகுழியும் பாதுகாப்பானது இல்லை என நாம் காட்டி விட்டோம் என்றார்.
இந்தியாவில் உற்பத்தியான ஆயுதங்களை கொண்டு 22 நிமிடங்களில் எதிரிகளை இந்திய ராணுவம் மண்டியிட செய்தது என்றும் பெருமிதத்துடன் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு காட்டி விட்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, எந்தவித வேற்றுமையும் இன்றி, அதில் இருந்து விடுபட்ட, ஒரு வலிமையான இந்தியாவை விரும்பிய ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளின்படி அரசு பணியாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறைகளில் வலிமையான ஒன்றாக உருவாக்க 11 ஆண்டுகளாக தன்னுடைய அரசு பணியாற்றி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.






