படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை
வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரெயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்வதையும், அப்போது ரெயிலுக்குள் கண்ணாடி டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சலனமின்றி இருப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் குறித்து மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் கடந்த 3 நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரெயில் பயணிகளுக்கு நீண்ட தூர பயணத்திற்கான உலகத்தரம் வாய்ந்த பயணம் கிடைக்க இந்த மாத இறுதி வரை இந்த சோதனைகள் தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.