உத்தரபிரதேசம்: திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி


உத்தரபிரதேசம்: திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி
x
தினத்தந்தி 12 Nov 2024 11:51 AM IST (Updated: 12 Nov 2024 12:35 PM IST)
t-max-icont-min-icon

சம்பவம் நடந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கஸ்கஞ்ச் (உத்தரப்பிரதேசம்),

உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மோகன்புரா கிராமத்தில், வீடுகளுக்கு பூச்சுவேலை செய்ய திறந்தவெளியில் மண் அள்ளியபோது மண் சரிவு ஏற்பட்டதாகவும், அதில் சிக்கி பல பெண்கள் புதையுண்டனர் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து கஸ்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் மேதா ரூபம் கூறுகையில், "மண் சரிவில் இருந்து மொத்தம் 9 பெண்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் மாவட்ட மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்" என்று அவர் கூறினார். இந்த விபத்து சம்பவத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story