மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: கார்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு

image courtesy: ANI
வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்த ஒரு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள பக்தர்களுக்கான கூடாரங்கள் அமைந்துள்ள மகாகும்ப நகரின் செக்டார் 19 பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமானது. இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பிரயாக்ராஜில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்த கார் ஒன்று ஷார்ட் சர்க்யூட் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதை ஒட்டி அருகில் நின்றிருந்த மற்றொரு காரும் தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக கார்களில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.






