ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை


ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
x

File image

கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் (யுஜி) தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவர், நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது நடப்பாண்டில் 15வது தற்கொலை சம்பவம் ஆகும்.

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரை சேர்ந்த அசுதோஷ் சோராசியா, தனது உறவினருடன் கடந்த 6 மாதங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நேற்று இரவு அவரது குடும்பத்தினர் அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால், விடுதியின் காவலர் அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த காவலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது மாணவர் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் மற்றும் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாணவன் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story