உ.பி.: பணம் கேட்ட சுங்க சாவடி ஊழியருக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ

சுங்க சாவடியில் பணம் செலுத்துவதற்கான புதிய முறையா இது? என ஒருவர் கேட்டுள்ளார்.
ஹாப்பூர்,
உத்தர பிரதேசத்தில் ஹாப்பூர் நகரில் சிஜார்சி சுங்க சாவடியில் ஊழியர் ஒருவர் வேலையில் இருந்துள்ளார். அப்போது, ஊழியரின் அறைக்குள் புகுந்த பெண் ஒருவர் திடீரென, அவரை கன்னத்தில் அறைய தொடங்கினார்.
என்னவென்று அறிவதற்கு முன்பே, அடுத்தடுத்து அடி விழுந்துள்ளது. உடனே காவலர் ஒருவர் ஓடி வந்து அந்த பெண்ணை சமரசப்படுத்த முயன்றார். இதனை பார்த்த வாகன பயணிகள் மற்றும் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் என்னவெனில், அந்த பெண்ணின் பாஸ்டேக்கில் போதிய பணம் இல்லை. அவரிடம், பணம் செலுத்தும்படி ஊழியர் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுப்பதற்கு பதிலாக ஊழியருக்கு அந்த பெண் அடி கொடுத்துள்ளார்.
அவர் காசியாபாத் நகரில் இருந்து வந்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த வீடியோ வைரலானதும் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். 4 விநாடிகளில் 7 அறைகள்? ஆக்சன் படங்களில் கூட இந்தளவுக்கு வேகம் இருக்காது என ஒருவரும், இதென்ன சுங்க சாவடியில் பணம் செலுத்துவதற்கான புதிய அணுகுமுறையா? என மற்றொருவரும் கேட்டுள்ளனர்.
ஒரு பெண் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் அவர் செய்து விடலாம் என்று அர்த்தமில்லை. இது மிக அதிகம் என இன்னொருவர் தெரிவித்து உள்ளார். பலரும் உத்தர பிரதேச போலீசாரை டேக் செய்து, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளனர்.






