உ.பி.: திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஆழ்ந்து தூங்கிய பக்தர் பலியான சோகம்

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, பஸ் தீப்பிடித்து கொண்டதில் பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார்.
பிரோசாபாத்,
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சிலர் பஸ்சில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி விட்டு, அயோத்திக்கு சென்றனர். பின்பு ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில், பிரோசாபாத் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனை பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி வெளியே தப்பி ஓடினர்.
இதில், புனித நீராடலில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய பக்தர்களில் ஒருவர் பஸ்சுக்குள் ஆழ்ந்த நிலையில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அவரை யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. பஸ் தீப்பிடித்து முற்றிலும் எரிந்ததில் சிக்கி அவர் பலியானார்.
அவர், ராஜஸ்தானின் நகாவர் பகுதியை சேர்ந்த பவன் சர்மா (வயது 33) என தெரிய வந்துள்ளது. மற்ற அனைவரும் வேறொரு பஸ்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.