மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம், தமனிகளில் அடைப்புகள் இருக்கிறதா என மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக உத்தவ் தாக்ரேவுக்கு இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கடந்த 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர் 2016ம் ஆண்டும் இதேபோல ஆஞ்சியோ செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி தசரா விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டவணையை அறிவிக்கவில்லை. இதனிடையே இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.