வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்: தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன..?

ஒரே எண்ணை பலருக்கு ஒதுக்கியதால் அவர்கள் போலி வாக்காளர்கள் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதன் மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தரவுகளை 'ஈரோநெட்' என்ற தேர்தல் கமிஷன் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறை காரணமாக, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
இதனால், அந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்காளர்களுக்கு மாற்று எண்கள் ஒதுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை எண்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், அவர்களின் பெயர், சட்டசபை தொகுதி பெயர், வாக்குச்சாவடி விவரம் ஆகியவை வெவ்வேறாக இருக்கும்.
எனவே, வாக்காளர் அட்டை எண்கள் எப்படி இருந்தபோதிலும், அவர்கள் எந்த சட்டசபை தொகுதியில் தங்களது பெயரை பதிவு செய்தார்களோ, அந்த தொகுதியில், அந்த வாக்குச்சாவடியில்தான் வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது. எனவே, ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள் கொண்டவர்களை போலி வாக்காளர்களாக கருத தேவையில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.