கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம், மாமுனூர் பிரதான சாலையில் ரெயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னே சென்றுகொண்டிருந்த 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
அப்போது, லாரியில் இருந்த இரும்புக் கம்பிகள் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. தண்டவாளங்கள் விழுந்ததால், ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 6 படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் ஆட்டோக்கள் முற்றிலும் உருக்குலைந்து.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






