மணிப்பூரில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தொடங்கியது

மணிப்பூரில் குகி அமைப்புகள் நடத்தி வந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நெடுஞ்சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சுமார் 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் பதவி விலகியதை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் பொது போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டார்.அதன்படி சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 8-ந் தேதி பொது போக்குவரத்து தொடங்கியது. பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
அதே சமயம் மணிப்பூரில் இருந்து தங்களுக்கு தனி நிர்வாகம் ஏற்படுத்தும் வரை பொது போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என கூறி குகி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் மக்கள் சாலைகளில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், கற்களை போட்டும் பொது போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். காங்கோக்பி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இதை கண்டித்து காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு குகி அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி கடந்த 9-ந் தேதி முதல் குகி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் உள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு முழு அடைப்பு போராட்டத்தை கைவிட குகி அமைப்புகள் ஒப்புக்கொண்டன.
அதன்படி நேற்று முன்தினம் மாலை முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதை தொடந்து அந்த 2 தேசிய நெடுஞ்சாலைகளிலும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. எனினும் தனிநிர்வாகத்துக்கான தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை பொது போக்குரவத்துக்கான தங்களின் எதிர்ப்பை தொடருவோம் என குகி அமைப்புகள் தெரிவித்துள்ளன.