புதுவையில் 1-8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


புதுவையில் 1-8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 18 Sept 2024 6:31 AM IST (Updated: 18 Sept 2024 1:07 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுவை,

புதுவையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும், முழுமையாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று புதன்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது

இதையொட்டி வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என பல தரப்பினரிடமும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டினர். பந்த் போராட்டத்தால் இன்று பேருந்துகள் ஓடாது. இந்த நிலையில், இன்று 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


Next Story