திருப்பதி லட்டு விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜே.பி.நட்டா


திருப்பதி லட்டு விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 20 Sep 2024 11:52 AM GMT (Updated: 20 Sep 2024 11:57 AM GMT)

லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையே லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா கூறியதாவது;

"சமூக ஊடகங்கள் மூலம் இந்த பிரச்சினையை நான் அறிந்தேன். திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் இன்று நான் பேசினேன். அறிக்கையும் கேட்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்யும். பின்னர் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story