ஒரு பிராந்தியத்தை வீழ்த்த அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி - துணை ஜனாதிபதி பேச்சு

கோப்புப்படம்
ஒரு பிராந்தியத்தை வீழ்த்த அதன் மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில், 98-வது அகில பாரதீய மராத்தி சாகித்திய மாநாடு நடந்தது. இதில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-
ஒரு நாடு, அதன் கலாசார வளம் மற்றும் கலாசார பண்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது. இதில் இந்தியா தனித்துவமானது. உலகில் எந்த நாட்டையும் இந்தியாவுடன் ஒப்பிட முடியாது. நமது முன்னோர்கள் நமது கலாசாரத்தையும், மொழிகளையும் வளர்த்தனர். அதே வழியில் வளர்ப்பது நமது கடமை. இலக்கியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைகோர்த்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை செழிக்கச் செய்ய முடியும்.
ஒரு பிராந்தியத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை கைப்பற்ற வேண்டியதில்லை. அந்த பிராந்தியத்தின் கலாசாரத்தை முறியடித்து, மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள், அதே வழியைத்தான் கடைப்பிடித்தனர். அவர்கள் கொடூரமானவர்களாகவும், நமது மொழி, கலாசாரம், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை வெறுப்பவர்களாகவும், அடக்குமுறையாளர்களாகவும் இருந்தனர்.
பழிவாங்கும் தன்மையுடனும், கொடுங்கோன்மையுடனும் திகழ்ந்தனர். நம்மை காயப்படுத்த நமது வழிபாட்டு தலங்கள் மீது அவர்களது வழிபாட்டு தலங்களை கட்டிக்கொண்டனர். நமது மொழிகள் வளர முடியாத அளவுக்கு தடுத்தனர். நமது மொழி தழைக்காவிட்டால், நமது வரலாறு தழைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.