மணிப்பூரில் தொடரும் பதற்றம்; காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: 7 பேர் கைது
மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்க கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
காக்சிங்,
மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதனால், சற்று பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கடந்த 16-ந்தேதி கலவரம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது.
இதுதவிர, 3 மந்திரிகள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளையும் அந்த கும்பல் தாக்கியது. அவர்களின் சொத்துகளையும் சூறையாடியது. இதன் தொடர்ச்சியாக, இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், தவுபால் மற்றும் காக்சிங் உள்பட 7 மாவட்டங்களில் இணையதள சேவையை மணிப்பூர் அரசு சஸ்பெண்டு செய்தது.
வீடுகளை முற்றுகையிட்டு, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த மொத்தம் 32 பேரை இதுவரை பல்வேறு காலகட்டங்களில், மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் சஸ்பெண்டு செய்யப்பட்டன.
இதனால், மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மணிப்பூரின் காக்சிங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது திடீரென சிலர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், 2 அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதனை மணிப்பூர் போலீசார் எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளனர். எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்க கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்துள்ளனர்.