மனைவியை கொன்றுவிட்டு போலீசிடம் தற்கொலை நாடகமாடிய கோவில் பூசாரி கைது

தினேஷ் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது என சுஷ்மாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள கேசவ்புரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. கோவில் பூசாரியான இவர் தனது மனைவி சுஷ்மா சர்மா(வயது 40) மற்றும் 11 வயது மகளுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், தினேஷ் சர்மாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுஷ்மாவும், அவரது மகளும் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற தினேஷ் சர்மா, தனது மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்த தினேஷ் சர்மா, தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசாருக்கு அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியபோது, தனது மனைவியை கொலை செய்ததை தினேஷ் சர்மா ஒப்புக்கொண்டார்.
இதனிடையே, சுஷ்மாவின் உறவினர்களிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தபோது, இரவு நேரத்தில் சாப்பாடு விஷயம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் கோபத்தில் தினேஷ் சர்மா தனது மனைவியை கொலை செய்துவிட்டார் என்று கூறியுள்ளனர். ஆனால் சுஷ்மாவின் குடும்பத்தினர் இதனை ஏற்க மறுத்துள்ளனர்.
தினேஷ் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது என்றும், இது குறித்து ஏற்கனவே சுஷ்மா தங்களிடம் கூறியிருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில்தான் தினேஷ் தனது மனைவியை கொலை செய்துள்ளார் என சுஷ்மாவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதே சமயம், போலீசார் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த மறுக்கின்றனர் என்றும் சுஷ்மாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






