மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்


தினத்தந்தி 25 Jun 2024 9:49 AM GMT (Updated: 25 Jun 2024 1:25 PM GMT)

கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு மக்களவையில் தி.மு.க. எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

புதுடெல்லி,

18-வது நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகளும், எம் பி க்களும் பதவி ஏற்றனர். 2-வது நாளாக இன்று மக்களவை கூடியதும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டபோது கருணாநிதி,ஸ்டாலின், உயதநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர். கதிர் ஆனந்த், சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட எம்.பி.க்கள் பதவியேற்றபோது வருங்காலம் எங்கள் உதயநிதி...வாழ்க தமிழ்நாடு, ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர். பதவியேற்றதும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று தயாநிதி மாறன் எம்.பி.முழக்கமிட்டார்.

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார். "தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக" என அவர் கூறியதும் பா.ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழில் பதவியேற்ற திருமாவளவன், ஜனநாயகம் வாழ்க, அரசியல் சாசனம் வாழ்க என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.


Next Story