தமிழ்நாடு வெள்ள பாதிப்பு: மக்களவையை ஒத்திவைக்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'பெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவானது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல், கனமழையால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ. திருக்கனூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ. செம்மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்புரத்தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவானது.
இந்நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு வேண்டும் என்றும், புயல் பாதிப்புகள் குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க அனுமதி கோரியும் மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.