ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக பொம்மபுரம் ஆதீனம் (மயிலம்) சிவஞான பாலையா சுவாமிகள் பெயரை பரிந்துரைத்தது.
புதுடெல்லி,
ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில் சத்தியவேல் முருகன் என்பவரை நீக்குவதற்கும், வேறு ஒருவரை நியமிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சத்தியவேல் முருகனுக்கு பதிலாக முருகவேல் என்பவரை புதிய உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டது. ஆகம விதிகளுக்கு விரோதமான பல கருத்துக்களை கூறிவரும் முருகவேலை இந்த கமிட்டியில் நியமிக்கக் கூடாது என அர்ச்சகர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அர்ச்சகர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
புதிதாக ஐந்து பேர் கொண்ட பட்டியலை கொடுத்திருப்பதாகவும், சரவணன் என்பவரை ஆகம கமிட்டியில் நியமிக்க வேண்டுமெனவும் அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அந்த பட்டியலில் இருக்கும் வேறு ஒருவரை உறுப்பினராக்க வேண்டுமென அர்ச்சகர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை கமிட்டியில் உறுப்பினராக்க ஆட்சேபனை இல்லை என்றும் அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, ஆகமங்களை பின்பற்றாமல் தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும், அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை 2026 ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.






