தெரு நாய் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்

இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. பதில்மனு தாக்கல் செய்யாத தலைமை செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், தமிழகம் உள்பட 26 தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தெரு நாய் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;
"தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






