சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக 'செபி' யே விசாரிக்கட்டும் என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நேற்று முன் தினம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது.
செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை மாதபி பூரி புச் மற்றும் தவால் தம்பதியர் மறுத்து அறிக்கை வெளியிட்டனர். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் முதலீடு 2015 ல் இருவரும் சிங்கப்பூரில் வசித்தபோது, அதாவது மாதபி செபியில் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்யப்பட்டது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தனர். மேலும், அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்திருந்தது.
செபி தலைவர் மாதபி பூரி புச் வெளியிட்ட விளக்கத்திற்கு பிறகு ஹிண்டன்பர்க் நேற்று இரவு தனது எக்ஸ் வலைதளத்தில், "செபி தலைவர் மாதபி புச் எங்களின் அறிக்கைக்கு கொடுத்த பதில், சில முக்கியமானவைகளை ஒப்புக்கொள்வதோடு, புதிதாக பல முக்கிய கேள்விகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது. தாங்கள் எழுப்பிய விஷயங்கள் தொடர்பாக, செபி தலைவர் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிக்கிறாரா.?. மாதபி புச்சின் பதில், மொரீசியஸ்/பெர்முடா நிதி அமைப்பில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது. தனது கணவரின் இளம் வயது தோழருடன் இந்த பண்ட் நடத்தப்பட்டதும் அப்போது அவர் அதானி இயக்குனராக இருந்ததையும் உறுதி செய்துள்ளார். அதானி விவகாரம் தொடர்பான முதலீட்டு நிதிகளை விசாரிப்பதே செபியின் பணியாக உள்ளது. அதில் மாதபி புரி புச்சின் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்த நிதியும் அடங்கும். எனவே, இது வெளிப்படையாக இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் ஆகும்" என்று அதில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகங்கள் சரிவுடன் தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.