மாநிலங்கள் உருவான தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பு நாட்டை வளமாக்குகிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
1956 நவம்பர் 1-ல் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன.
இந்தநிலையில் மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
'கன்னடா ராஜ்யோத்சேவா என்பது, கர்நாடகாவின் முன்மாதிரியான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்கும் சிறந்த மனிதர்களை இம்மாநிலம் பெற்றுள்ளது. கர்நாடகாவின் மக்கள் எப்போதும் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாகவும், வெற்றியுடனும் இருக்கட்டும்.
மத்தியப் பிரதேசம் ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கார் அதன் நாட்டுப்புற மரபுகள் மற்றும் பழங்குடி கலாச்சாரத்தால் விவரிக்கப்படுகிறது. இந்த மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறது.
கேரளா அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகள், வலிமையான பாரம்பரியம் மற்றும் கடினமாக உழைக்கும் மக்களுக்காக பெயர் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் கேரளா மக்கள் தங்களின் முத்திரைகளை பதித்துள்ளனர். இம்மாநில மக்கள் வருங்காலங்களில் முன்னேறட்டும்.
அரியானா அதன் வளமான வரலாற்று பாரம்பரியத்துக்காக அறியப்படுகிறது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.' இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, கேரளா, கர்நாடாகா, மத்திய பிரதேசம் , அரியானா, ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துகளை அந்த அந்த மொழியில் குறிப்பிட்டுள்ளார்
தொடர்ந்து ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
தமிழ்நாடு, ஆந்திரா,சத்தீஸ்கார், சண்டிகர், டெல்லி, அரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, மற்றும் லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகிய மக்களுக்கு இன்று தனி மாநிலமாக உருவான நாள்.
பல மொழிகள், துடிப்பான கலாச்சாரம், வளமான வரலாறுகள் இந்தியாவின் வலிமையான இதயம். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருக்கும் பிணைப்புகளை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை உணர்ந்து, இந்த ஒற்றுமையைக் கொண்டாடுவோம்,பாதுகாப்போம் என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு வரை அரசு சார்பில் நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின்னர், ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.