ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு


ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை - மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2024 11:48 PM GMT (Updated: 10 Oct 2024 6:25 AM GMT)

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.

ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story