வன்முறை பாதித்த மணிப்பூரில் ஸ்டார்லிங் பயன்பாடு...? எலான் மஸ்க் மறுப்பு


வன்முறை பாதித்த மணிப்பூரில் ஸ்டார்லிங் பயன்பாடு...? எலான் மஸ்க் மறுப்பு
x

இந்தியாவின் மேல் வரும்போது, ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் அணைக்கப்பட்டு விடும் என்று மஸ்க் தெரிவித்து உள்ளார்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில், சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து இணையதள சேவை சஸ்பெண்டு செய்யப்பட்டது. எனினும், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்பு படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.

இதுபற்றி இந்திய ராணுவத்தினர் வெளியிட்டு உள்ள சில புகைப்படங்களில், அந்த சாதனங்கள் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து, எக்ஸ் பயனாளர்கள் பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வெளியிட்டனர். அதில் ஒருவர், இந்த சாதனங்களில் ஒன்றில் ஸ்டார்லிங்கின் சின்னம் இடம் பெற்று உள்ளது என குறிப்பிட்டார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என மற்றொருவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மஸ்க், இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் அணைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்து உள்ளார்.

செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் வைத்திருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில், மணிப்பூரில் ஸ்டார்லிங் போன்ற சாதனங்கள் கிடைத்திருப்பது, வன்முறை பாதித்த இடங்களில் அதற்கான சாத்தியம் எப்படி? என விசாரணை அமைப்புகள் விசாரிக்க தூண்டியுள்ளன.


Next Story