டெல்லி மந்திரி அதிஷியை மருத்துவமனையில் சந்தித்த அகிலேஷ் யாதவ்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிஷியை அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்தார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அத்துடன், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடந்த 21-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து நேற்று அதிகாலை அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதிஷியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மந்திரி அதிஷியை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று மருத்துவமனையில் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
"டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவர் துணிச்சலானவர் மட்டுமல்ல, மக்களுக்காக போராடவும் தெரியும். டெல்லியின் பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து போராடி வருகிறார். பா.ஜ.க. ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்-மந்திரிகளின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. கெஜ்ரிவால் டெல்லியில் அரசாங்கத்தை உருவாக்கி சுகாதாரம், கல்வி மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த உழைத்தார், ஆனால் அவருக்கு தடைகள் உருவாக்கப்பட்டன. தற்போது கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை சி.பி.ஐ. வகுத்து வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.