சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் ஒடிசா வருகிறார்


சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் ஒடிசா வருகிறார்
x

ஒடிசா முதல்-மந்திரி மாஜி கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றபோது, சிங்கப்பூர் அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

புவனேஸ்வர்:

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அடுத்த மாதம் (ஜனவரி) ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.

ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று. இந்தியாவும் சிங்கப்பூரில் ஐ.டி., வங்கி மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் வலுவான முதலீட்டை கொண்டுள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. பரஸ்பர வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.

சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடுகின்றன. இரு நாடுகளும் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. இந்த நட்புறவு இப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு மூலோபாய கூட்டாண்மையாக உருவாகியுள்ளது. இந்த இருதரப்பு உறவை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.

ஒடிசா முதல்-மந்திரி மாஜி கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றபோது, சிங்கப்பூர் அதிபர் ஒடிசாவிற்கு வருகை தர ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அதிபர் தனது இந்திய பயணத்தின் போது ஒடிசாவுக்கு வர முடிவு செய்துள்ளார்.


Next Story