ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு


தினத்தந்தி 6 Aug 2024 2:57 AM GMT (Updated: 6 Aug 2024 4:56 PM GMT)

வங்காளதேச நாட்டில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா, தற்போதைக்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்து செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த நாட்டிடம் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் அடைக்கலம் புகுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை ஷேக் ஹசீனா, இந்தியாவிலேயே தங்கியிருப்பார் என சொல்லப்படுகிறது. இதனால், ஷேக் ஹசீனா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்தியாவும் உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Live Updates

  • 6 Aug 2024 5:32 AM GMT

    வங்காளதேச விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்  வங்காளதேசத்தில் தற்போது நிலவும் சூழல், இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை  குறித்து எதிர்க்கட்சிகளிடம் விளக்கினார். அப்போது, வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வரும் அளவுக்கு அங்குள்ள சூழல் மோசமாகவில்லை என்றும் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

  • 6 Aug 2024 5:09 AM GMT

    வங்காளதேச விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

  • 6 Aug 2024 4:59 AM GMT

    வங்காளதேச விமானப்படையின் விமானம் இந்தியாவின் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரியுடன் நேற்று இந்தியாவுக்கு வங்காளதேச விமானப்படையின் சி-1301 ஜே என்ற விமானம் ஹிண்டன் விமானதளத்தில் தரையிறங்கியது. அதன்பிறகு விமான தளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ராணுவ விமானம் இன்று காலை வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்றது.

  • 6 Aug 2024 4:16 AM GMT

    வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வங்க தேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எடுத்துரைக்க உள்ளார்.

  • 6 Aug 2024 3:49 AM GMT

    ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அவர் டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது. அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனராக உள்ளார்.

  • 6 Aug 2024 3:08 AM GMT

    வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆத்திரமூட்டும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் மக்கள் பகிரக்கூடாது என்று மேற்கு வங்காள போலீசார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசர் கூறுகையில், பதற்றமான சூழலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் வெளியிடப்படுகின்றன. அத்தகைய வதந்திகளை நம்பவேண்டாம். போலி வீடியோக்களை பரப்பி சிக்கி கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளது.


Next Story