பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு: அலகாபாத் ஐகோர்ட்டு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உண்டு என அலகாபாத் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளம்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது 19 வார கர்ப்பிணியாக உள்ளார் என்றும், மைனர் சிறுமியான அவர் குழந்தையை பெற்று வளர்க்கும் பக்குவத்தில் இல்லை என்றும் வாதிட்டார். பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பமானது மனுதாரருக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணின் கருவை கலைக்கவிடாமல் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள வைப்பது என்பது அந்த பெண்ணின் அடிப்படை மனித உரிமையையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையையும் மீறுவதாகும் என்று தெரிவித்தனர்.
மேலும், குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவ கருத்தரிப்பு சட்டம் பிரிவு 3(2)-ன் படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு மருத்துவரீதியாக கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.