பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

File image

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பாலியல் வழக்குகள் அவர் மீது பதிவாகி உள்ளது. இதில் முதல் 2 வழக்குகளில் போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, 3-வது பாலியல் வழக்கில் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, பாலியல் வழக்கில் இருந்து ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜாமீன் மறுத்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து, ரேவண்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, 6 மாதங்களுக்கு பிறகு கோர்ட்டை அணுக அனுமதி கோரினார். ஆனால் இது குறித்து எதுவும் கூற முடியாது என்று கூறிய நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story