சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்


சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்
x

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர், நீதிபதி சஞ்சீவ் கன்னா. 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.


Next Story