பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் காலமானார்
மேகாலயாவில் பிறந்த பிபேக் டெப்ராய். கடந்த 2015-ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் பிபேக் டெப்ராய் (வயது 69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாசாரம்,அரசியல், ஆன்மீகம் என பல துறைகளை நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார். பொதுக்கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ச்சியாக பணியாற்றினார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவர் புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார். எனக்கு பல வருடங்களாக டாக்டர் டெப்ராய் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்விச் சொற்பொழிவு மீதான ஆர்வத்தை அன்புடன் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா மற்றும் டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த பிபேக் டெப்ராய், கேம்பிரிட்ஜ்-ல் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 2019-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி வரை நிதி ஆயோக்கின் உறுப்பினராக இருந்தார். இவர் ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.